search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி மத்திய சிறை"

    திருச்சி மத்திய சிறையில் மாநகர போலீஸ் உதவி கமி‌ஷனர், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 50 பேர் கொண்ட குழு இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். #PuzhalJail #TrichyCentralJail
    திருச்சி:

    சென்னை புழல் சிறையில் கைதிகள் சிறை அறையில் டி.வி. மெத்தை, செல்போன் வசதியுடன் சிறப்பு உணவு தயாரித்து சாப்பிட்டு சொகுசு வாழ்க்கை நடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.



    சிறை அதிகாரிகள் உதவியுடன் கைதிகள் இந்த சொகுசு வாழ்க்கை நடத்தியதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சொகுசு வாழ்க்கை நடத்திய கைதிகள் 4 பேரும் அவர்களுக்கு உதவிய ஜெயில் வார்டன்கள் 8 பேரும் அதிரடியாக வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 6.30 மணிக்கு திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு திருச்சி மாநகர போலீஸ் உதவி கமி‌ஷனர் சிகாமணி, சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு நிகிலா ராஜேந்திரன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் மற்றும் சிறை வார்டன்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழு அதிரடியாக திருச்சி சிறையில் சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு பிளாக்குகளாக சென்று சோதனை நடந்தது. கைதிகள் பயன்படுத்திய கழிவறைகளிலும், மணல் பகுதி, மரங்கள், சமையல் அறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

    அப்போது சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா என சோதனை நடந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. ஆனால் இதில் எந்தவிதமான பொருளும் சிக்கவோ, கைப்பற்றப்படவோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதே போன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள திருச்சி மத்திய பெண்கள் சிறையிலும் இன்று காலை வெளியிலிருந்து போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது பெண் கைதிகளிடமும் பெண் போலீசார் சோதனை செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் சிறையில் ஒரு மணி நேரம் சோதனை நடைபெற்றது. திருச்சி மத்திய ஆண்கள் சிறையில் 1,300 கைதிகள் உள்ளனர். இதில் சுமார் 800 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். சிறையில் ரவுடிகள் மற்றும் கொலை வழக்கு கைதிகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டனர். #PuzhalJail #TrichyCentralJail
    திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 2 சிம்கார்டுகள் ஆகியவற்றை சிறை வார்டன்கள் பறிமுதல் செய்தனர்.
    திருச்சி:

    சென்னை சிந்தாமணி அண்ணாநகரை சேர்ந்தவர் சங்கர்(வயது 32). ஆயுள்தண்டனை கைதியான இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சங்கரை புழல் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றினார்கள். சென்னை ஆயுதப்படை போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வந்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, சிறையின் நுழைவு வாயிலில் சங்கரிடம் சிறை வார்டன்கள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது உடைக்குள் 200 கிராம் கஞ்சா, 2 சிம்கார்டுகள் ஆகியவற்றை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே அவற்றை சிறை வார்டன்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறை வார்டன் ரமேஷ் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கைதியிடம் கஞ்சா மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்தது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று 10 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRcentenary
    திருச்சி:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதல் கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந்தேதி சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சென்னை புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும் இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு காலம் நிறைவு பெற்ற தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த திவாகர், ராஜா, பிச்சுமணிவேலு, அய்யனார், கணேசன், புகழேந்தி, பால்ச்சாமி, ரவிசங்கர், குமார், சின்னதம்பி ஆகிய 10 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், எஸ்.பி., நிகிலா நாகேந்திரன் ஆகியோர் பல்வேறு அறிவுரைகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். 10 பேரையும் அழைத்து செல்ல அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறை முன்பு குவிந்திருந்தனர். பின்னர் அவர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    இது பற்றி விடுதலையான கைதிகளின் உறவினர்கள் கூறும் போது, தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்போவதாக அறிவித்த தகவல் எங்களுக்கு நேற்றிரவுதான் தெரியவந்தது. இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களது உறவினர்கள் விடுதலை செய்யப்படுவதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.

    இதையடுத்து அவர்களை அழைத்து செல்வதற்காக நேற்றிரவே திருச்சி மத்திய சிறைக்கு வந்து விட்டோம். விடுதலையான எங்களது உறவினர்கள் நல்வாழ்வு வாழ்வதற்கான உதவிகளை செய்து கொடுப்போம். அரசும் உதவவேண்டும் என்றனர்.

    ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு காலம் நிறைவு செய்த கைதிகள் மேலும் ஏராளமானோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென அவர்களது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். #MGRcentenary
    முசிறி அருகே வீரமணிப்பட்டியில் வீடுபுகுந்து பட்டபகலில் பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்து 58 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முசிறி:

    முசிறி அடுத்த வீரமணிப்பட்டி கிராமத்தில் பார்த்தீபன் என்பவரது வீட்டில் பட்டபகலில்  பூட்டை உடைத்து உள்ளே சென்ற இளம்பெண் லதா (34) திருடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பார்த்தீபன் பெண் ஒருவர் திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து அந்த பெண்ணை பிடித்து முசிறி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

    அப்போது அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பின்னர் அந்தபெண் மூலம் தப்பிஓடிய வாலிபருக்கு போன் செய்து வரவழைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபர் அந்த பெண்ணின் கணவர் திருச்சியை சேர்ந்த ரெங்கநாதன் (30) என்பதும், அந்த பெண் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. 

    மேலும் கணவன் மனைவி இருவரையும் போலீசார் தனித் தனியாக விசாரணை செய்ததில் இருவரும் மோட்டார் சைக்கிளில் கிராமத்திற்கு சென்று பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு திருடுவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முசிறி, துறையூர், தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் லதா மூலம் நகைகளை பல்வேறு இடங்களில் அடகு மற்றும் விற்கப்பட்டிருந்த 58 பவுன் நகைகளை போலீசார் மீட்டு, இருவரையும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கைது செய்து முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் கணவன்,மனைவி இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    ×